Dumpt.com
Gause aazam bamane be
saro sama madade Kibla-e-di
madade kaaba-e-ima
madade,
ALMADAD YA SHAIKH
MOHIYUDDIN ABDULKADIR
JILANI. EID-E-GAUSIA MUBARAK
HO.

Saturday, February 8, 2014

உரூஸ் தினம் கொண்டாடலாமா?

உரூஸ் தினம் கொண்டாடலாமா? கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள் கந்தூரி என்பதை உரூஸ்
என்று அரபியில் கூறுவர். உரூஸ் என்பதின் அகராதிப் பொருள் புது மணவாளன்
என்பதாகும். புதுத் தம்பதிகளை 'அரூஸ்' என்பர், சன்மார்க்கப்
பெரியார்களின் நினைவு தினத்தை 'உரூஸ்' என்று கூறப்படுவதற்கு மிஸ்காத்தில்
கப்றில் வேதனை பற்றிய பாடத்தில் வரும் ஒரு ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. கப்றில்
முன்கர், நகீர் அலைஹிஸ்ஸலாமவர்களின் விசாரணையில் வெற்றி பெறுவோரைப்
பார்த்து 'புது மணவாளன் போன்று உறங்கு! அவர் குடும்பத்தில் அவருக்கு மிக
விருப்பமானவர் தவிர அவரை எழுப்ப முடியாதளவு உறங்கும்! என்று மலக்குகள்
கூறுவர். இதன்படி ஒரு நல்லடியார் மரணித்த அன்று கப்றில் மணவாளன் போன்று
இருப்பார். அதனால்தான் அத்தினத்தை 'உரூஸ்' என்று அழைக்கப்படுகி்ன்றது.
நல்லடக்கம் செய்யப்பட்ட மையித்திடம் நபிகள் திலகம் முஹம்மது முஸ்தபா
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் காட்டி "இவரைப் பற்றி
உமது நம்பிக்கை யாது? என்று மலக்குகள் கேட்பர். நல்லடியார் பெருமானாரின்
பேரழகைக் கண்டதும் அவர்தான் எங்கள் உயிரிலும் உயர்ந்த உத்தமத்
திருத்தூதர்" என்று கட்டியம் பகர்வார். அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்
சுந்தர நபியின் சந்திர வதனத்தை கண்குளிரக் கண்டதனால் அவர் அன்று மணவாளன்
போன்று மகிழ்ச்சியின் உச்சியிலிருப்பார். பொதுவாக உரூஸ் தினம் என்பது
வபாத்தான தினத்தைக் குறிக்கும். ஒவ்வொரு வருடமும் அத்தினத்தில் ஸியாரத்
செய்வர். கத்தமுல் குர்ஆன் ஓதுவர், உணவு சமைத்து யாவருக்கும் வழங்குவர்.
முடிவில் இதன் நன்மைகளை குறித்த நபரின் ஆத்மாவுக்குச் சேர்த்து வைப்பர்.
உரூஸ் தினத்தில் இவைதான் அதிகமாக இடம்பெறுகின்றன. உரூஸ் தினத்திற்கான
பிரதான ஆதாரம் பின்வரும் ஹதீதாகும். 'ஒவ்வொரு வருடமும் உஹத் யுத்தத்தில்
ஷஹீதானவர்களை றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
தரிசிப்பதற்காகச் செல்வார்கள். அறிவிப்பவர் : இப்னு அபீ ஷைபா ஆதார நூல் :
ஷாமி பாடம் : ஸியாரத்துல் குபூர் தப்ஸீர் கபீர், துர்ருல் மன்தூர்
உள்ளிட்ட தப்ஸீர்களில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது. றஸூலுல்லாஹி
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் உஹது
ஷுஹதாக்களை ஸியாரத்துச் செய்வதற்காக வருவார்கள். அவர்களுக்கு ஸலாம்
கூறுவார்கள். அவர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். நபியவர்கள் செய்தது
போன்றே அன்னாருக்குப் பின் நான்கு கலீபாக்களும் செய்தார்கள். இந்தியாவில்
புகழ் பூத்த ஹதீஸ் கலை பேரறிஞர் ஷைகுனா ஷாஹ் அபதுல் அஸீஸ் முஹத்திதுத்
திஹ்லவி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களது பதாவா அஸீஸியா
பக்கம் 45இல் பின்வருமாறு வரைகின்றார்கள். 'மரணித்தவருக்காக ஓரிடத்தில்
மக்கள் திரண்டு திருக்குர்ஆன் ஓதிய பின் வந்தோருக்கு தானம் வழங்கும் முறை
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்திலோ, நான்கு
கலீபாக்களின் காலத்திலோ இருக்கவில்லை. ஆயினும், இவ்வாறு செய்வது
குற்றமன்று உயிருள்ளோரின் நற்செயல்களால் மரணித்தோர் நிச்சயம் பயன்
பெறுவர். 'ஸுப்தத்துன் நஸாயிஹ் பீமஸாயிலிஹ் தபாயிஹ்' என்ற நூலில் ஷாஹ்
அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள்
மேலும் கூறுகையில், 'உரூஸ் (கந்தூரி)க்கு எதிராக குரல் கொடுப்பதும்
அதனைக் குறை கூறுவதும் அறியாமையால் ஏற்பட்டதாகும். எந்த ஒரு நபரும்
ஷரீஅத்தில் தீர்மானிக்கப்பட்ட பர்ளுகள் அல்லாதவற்றை பர்ளு என்று
கூறுவதில்லை. நல்லடியார்களின் கப்றுகளிலிருந்து பறக்கத் பெறுதல்,
நன்மைகளை அவர்களுக்கு சேர்த்து வைத்தல், திருக்குர்ஆனை ஓதுதல், இனிப்புப்
பண்டங்கள், உணவுகள் பரிமாறல் அவர்களிடமிருந்து உதவிகள் பெறல் என்பன
அறிஞர்களின் ஏகோபித்த இஜ்மாஃவின்படி நற்காரியங்களாகும். ஒருவர் வபாத்தான
தினமான அத்தினம் இருப்பதினால்தான் அத்தினத்தில் 'உர்ஸ்'
கொண்டாடப்படுகின்றது. உர்ஸ் தினத்தில் இவை கிரமமாக செய்யப்படுகின்றன.
தவிர இச்செயல் உர்ஸ் தினத்தில் மாத்திரமல்ல. ஏனைய எல்லா நாட்களிலும்
செய்ய முடியும். அறபிகள் ஹஜரத் செய்யித் அஹ்மத் பதவி ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்களின் உர்ஸ் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
குறிப்பாக மதீனத்து மக்களும், அங்குள்ள உலமாக்களும் ஹழரத் ஹம்ஸா
றழியல்லாஹு அன்ஹுவின் உர்ஸ் தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர்.
கந்தூரி தினத்தில் இருக்கும் முக்கிய விடயங்கள் இரண்டு. 1. ஸியாரத் 2.
அன்னதானம் வழங்கல் இவை இரண்டையும் தனித்தனியாக நோக்கும்போது இவ்விரண்டும்
சுன்னத்தான காரியங்களாகும். ஷரீஅத் அனுமதிக்கின்ற நன்மை தரும் சுன்னத்தான
இரு காரியங்கள் ஒன்று சேரும்போது எப்படித் தகாதது ஏற்படும்? ஆரம்பத்தில்
ஸியாரத் செய்வது தடுக்கப்பட்டிருந்தது. பின் அனுமதிக்கப்பட்டது. இதனை
காலவரையறையின்றி எப்போதும் செய்யலாம். தனியாகவும் செய்யலாம். கூட்டாகவும்
செய்யலாம். தினமும் ஸியாரத் செய்யலாம். வாரத்தில், மாதத்தில், வருடத்தில்
செய்யலாம். ஷரீஅத் அனுமதித்த வகையில் ஸியாரத் செய்வதில் எதுவித
தடையுமில்லை. பொதுவாக ஒருவரை 'வலி' என்று எப்படித் தீர்மானிக்க முடியும்?
ஒருவரின் இறுதி முடிவை அல்லாஹுத்தஆலா ஒருவன்தான் அறிவான். ஒருவரின் இறுதி
முடிவு எப்படியானது என்று நிச்சயமில்லாத ஒருவரை 'வலி' என்று எப்படிக் கூற
முடியும்? என்று சிலர் விதண்டாவாதம் செய்கின்றனர். ஒருவரின் வெளிப்படையான
நடத்தையை வைத்தே தீர்ப்புக் கூறுமாறு ஷரீஅத் நமக்குப்
பணித்திருக்கின்றது. உயிருடன் வாழும்போது முஸ்லிமான ஒருவர் மரணத்தின்
பின்பும் முஃமினாகவே இருப்பார் என்ற அடிப்படையில்தான் அவரின் இறுதிக்
கிரியைகள் எல்லாம் செய்யப்படுகின்றன. ஒருவரின் இறுதி முடிவில் ஐயம்
ஏற்படுமாயின் சில காபிர்களையும் குளிப்பாட்டி கபன் செய்து தொழுவித்து
முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்ய வேண்டி வரும், என்ன விபரீதம்!
ஒரு தினம் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முன் ஒரு ஜனாஸா
சென்று கொண்டிருந்தது. அம்மனிதரை ஸஹாபாக்கள் புகழ்ந்துரைத்தனர்.
அதைக்கேட்ட திருநபியவர்கள் 'வஜபத்' என்றார்கள். பின் சற்று நேரம்
தாமதித்து மற்றுமொருவரின் ஜனாஸா கடந்து சென்றது. அவரை ஸஹாபாக்கள்
இகழ்ந்து கூறினார்கள். அதற்கும் 'வஜபத்' என்றார்கள். ஹஜரத் உமர் பாறுக்
ரழியல்லாஹு அன்ஹு 'வஜபத்' என்பதன் பொருள் யாது? என்று கேட்டார்கள்.
முந்தியவர் சொர்க்கவாதி! பிந்தியவர் நரகவாதி! வையகத்தில் நீங்கள்
எல்லோரும் அல்லாஹ்வின் சாட்சியாளர்கள் என்று விடை பகர்ந்தார்கள். பொதுவாக
முஸ்லிம்கள் ஒருவரை 'வலி' என்று தீர்மானித்திருந்தால் அல்லாஹ்விடத்திலும்
அவர் வலியாகவே இருப்பார். அல்லாஹுத்தஆலாவின் தீர்மானம் மக்களி்ன் வழியாக
வெளிவரும். 'முஸ்லிம்கள் நல்லதெனக் காண்பவை அல்லாஹ்விடமும் நல்லதாகவே
இருக்கும். முஸ்லிம்கள் கெட்டதாக காண்பவை அல்லாஹ்விடமும் கெட்டதாகவே
இருக்கும்' என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
கூறினார்கள். 'எனது கப்றை திருவிழாவாக எடுக்க வேண்டாம்' என்று நபி
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். பொதுவாக கந்தூரி விழாக்கள்
திருவிழாக்கள் போன்று இருப்பதால் கந்தூரி விழா எடுப்பது கூடாது என்றே
மேற்படி ஹதீஸ் கூறுகின்றது என்று சிலர் இதை ஆதாரமாகக் கூறுகின்றனர்.
இக்குற்றச் சாட்டிற்கு அறிஞர்களின் விளக்கம் வருமாறு, 01. ஈத்
பெருநாட்கள் வருடத்தில் இரு முறைதான் வருகின்றன. பெருநாள்போன்று
வருடத்தில் இருதினம் என்று மட்டுப்படுத்தாமல் அடிக்கடி செய்து வாருங்கள்.
02. பெருநாளில் ஆரவாரம், களியாட்டம், விழாக்கோலம் போன்றவைகள் இடம்பெறும்.
இப்படியான செயற்பாடுகளில் எவையும் எனது கப்றடியில் இருக்கக் கூடாது.
ஒழுக்கத்துடன் வர வேண்டும். அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். 03.
தனியாகவும் கூட்டாகவும் அடிக்கடி வந்து எனது ஷபாஅத்திற்குரிய தகுதியைப்
பெற்றுக் கொள்ளுங்கள். இவைதாம் அறிஞர்கள் கூறிய விளக்கமாகும்.
கந்தூரியில் முக்கியமாக இடம்பெறுவது, 1. கத்தமுல் குர்ஆன் 2. உணவுப்
பரிமாறல் 3. ஸியாரத் 4. மௌலித் 5. திக்ர் மஜ்லிஸ் மரணித்தவர்களுக்காக
குர்ஆன் ஓதி அதன் கூலியை சேர்த்து வைக்க முடியும். அதுபோன்று உயிருள்ளவர்
செய்யும் தர்மத்தின் கூலி மரணித்தவருக்குச் சேரும். இவற்றைப் பொதுவாக
ஷரீஅத் அனுமதித்திருக்கும்போது வலிமார்கள் விடத்தில் எப்படி ஹறாமாக
வந்துவிடும். மரணித்தவருக்காக திருக்குர்ஆன் ஓதி அதன் தவாபை சேர்த்து
வைக்க முடியும் என்று இப்னு தைமியா உட்பட அனைத்து அறிஞர்களும் கூறி
இருக்கின்றனர். அப்படி இருக்க மரணித்தவருக்காக கத்தமுல் குர்ஆன் நிகழ்வு
எப்படி ஹறாமாகும்? மரணித்தவர்களின் நற்செய்திகளை, பண்புகளை, சிறப்புக்களை
எடுத்துக் கூறுமாறு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
கூறியிருக்கும்போது மரணித்த வலிமார்களின் நற்பண்புகளையும்,
சிறப்புக்களையும் அன்னாரின் போதனைகளையும் பாராயணம் செய்வதை அவர்களை
நினைவு கூறுவதை எப்படித் தடையாக கொள்ள முடியும். நபிமார்களின் செய்திகளை
கூறுவது இபாதத் - வணக்கம் ஸாலிஹீன்களின் செய்திகளை கூறுவது
குற்றப்பரிகாரம் என்றும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
கூறியிருக்கின்றார்கள். இதன்படி வலிமார்கள் செய்திகளை மனாக்கிபுகளை
கூறுவது நமது பாவத்திற்கு பரிகாரமாக ஏன் ஆகாது. ஸியாரத்துச் செய்வதனால்
மறுமையி்ன் நினைவுவரும் என்றும், நாம் செய்யும் ஸியாறத்தை அடங்கி
இருப்பவர் அறிவார் என்றும், அதனால் நமக்கும் அவருக்குமிடையில் பந்தம்
வளரும் என்றும் ஹதீதுகளில் இமாம்களின் கூற்றுக்களில் காண முடிகின்றது.
நல்லவர்களோடு சேர்ந்திருங்கள் வெற்றி கிட்டும் என்று அல்லாஹுத்தஆலா
திருமறையில் கூறியுள்ளான். நல்லவர் உறவு உயிருள்ளவர் மரணித்தவர் என்று
பேதம் இல்லாமல் பொதுவாக கூறப்பட்டிருப்பதனால் நல்லவர்கள் அரிகிய
இக்காலத்தில் வலிமார்களின் உறவில் நெருங்கியிருப்பது வெற்றிக்கு
வழியாகாதா? கந்தூரிகளின் நடைமுறை நல்ல பித்அத்தாக இருக்கலாம். ஆனால்,
அங்கு நடைபெறும் விடயங்களின் எண்ணக்கரு நபிகள் நாதர் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் நடந்தவைகளாகும் என்பதில் எவ்வித ஐயமும்
கிடையாது.